பம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு: நாளைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கெடு
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நாளைக்குள் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, புதிதாக விண்ணப்பம் அளிக்கும்படி ம.தி.மு.க.வுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும், ம.தி.மு.க.வின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பம்பரம் சின்னம் பொது சின்னம் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்திருந்தனர்.
அதன்படி வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பம்பரம் சின்னம் கோரி ம.தி.மு.க. அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.