'ஓ.பி.சி.க்களின் உரிமைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது' - பிரதமர் மோடி


ஓ.பி.சி.க்களின் உரிமைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது - பிரதமர் மோடி
x

போலி சான்றிதழ்கள் மூலம் ஓ.பி.சி.க்களின் உரிமைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் மதுராபூர் தொகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்துவதற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கிடைத்துள்ள இட ஒதுக்கீட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக கொள்ளையடிக்கிறது. முஸ்லிம்களுக்கு போலியான ஓ.பி.சி. சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்த போலி சான்றிதழ்களை கொல்கத்தா ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.

மேற்கு வங்காளத்தின் எல்லை வழியாக ஊடுருவல்காரர்களை அனுமதித்து தேசிய பாதுகாப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 'இந்தியா' கூட்டணியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்காளத்தை வளர்ச்சிக்கு எதிரான திசையில் கொண்டு செல்கின்றன. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நமக்கு வளர்ச்சியடைந்த வங்காளம் தேவை."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story