பிரசாரத்தின்போது முத்தங்களை பறக்கவிட்ட முன்னாள் அமைச்சருக்கு உடல்நலக்குறைவு


பிரசாரத்தின்போது முத்தங்களை பறக்கவிட்ட முன்னாள் அமைச்சருக்கு உடல்நலக்குறைவு
x
தினத்தந்தி 11 April 2024 8:51 AM IST (Updated: 11 April 2024 10:26 AM IST)
t-max-icont-min-icon

கடும் வெயில் காரணமாக முன்னாள் அமைச்சருக்கு சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி காரைக்கால் மாவட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோருடன் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது வாகனத்தில் இருந்தபடி வாக்காளர்களுக்கும், தொண்டர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பதிலுக்கு அவர்களும் முத்தங்களை பறக்கவிட அதை அவர் 'கேட்ச்' பிடித்து மகிழ்ந்தார். இது பிரசாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திவிட்டு, நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார். அப்போது கடும் வெயில் காரணமாக அவருக்கு திடீரென சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார். அங்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ஆதரவாளர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று காரைக்கால் புதுத்துறை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

வெயில் தாக்கத்தால் சந்திரபிரியங்காவுக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்றும், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாரத்தில் பறக்கும் முத்தங்களை தெறிக்கவிட்டு, கலகலப்பை ஏற்படுத்தி தீவிரமாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரான சந்திரபிரியங்கா உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர்களது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.


Next Story