தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியானது


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியானது
x

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவை கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமாரிடம் அண்ணாமலை வழங்கினார். அப்போது அவருடன் பா.ஜ.க. முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அசையும் சொத்து ரூ.36 லட்சமும், அசையா சொத்து ரூ.1.12 கோடியும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அண்ணாமலையின் மனைவி அகிலாவின் பேரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story