'நாட்டின் மக்கள்தான் என் வாரிசுகள்' - பிரதமர் மோடி


தினத்தந்தி 21 May 2024 1:17 PM GMT (Updated: 21 May 2024 2:17 PM GMT)

நாட்டின் மக்கள்தான் தனது வாரிசுகள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாட்னா,

பீகார் மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"எனக்கு வாரிசுகள் இல்லை. இந்த நாட்டின் மக்களே எனது வாரிசுகள். பீகார் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் நான் பாடுபடுவேன்.

எதிர்கட்சிகள் ஒன்று சேரும் போதெல்லாம் வகுப்புவாதம், சாதிவாதம் மற்றும் வாரிசு அரசியல் கலாசாரத்தை வளர்க்கிறார்கள். மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்கள் மீண்டும் நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றன.

ஏழை, எளிய மக்களுக்கு நீதி வழங்குவதற்காக பழைய தண்டனைச் சட்டத்தை மாற்றியமைத்து, "நியாய சம்ஹிதா" எனப்படும் நீதிச் சட்டத்தை பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இந்த மாற்றத்தை செய்வதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒருபோதும் நினைத்ததில்லை. ஊழல்வாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் தங்கள் பண பலத்தைப் பயன்படுத்தி சிறையிலிருந்து வெளியே வர முடிந்தது. அதே நேரத்தில் ஏழைகளும், சாமானியர்களும் பல ஆண்டுகளாக சிறைக்குப் பின்னால் இருக்க வேண்டியிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பீகார் மக்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்து வந்தனர். பீகார் மக்களுக்கு எதிராக தி.மு.க.வினர் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த தலைவர்கள் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்திய நேரத்தில் காங்கிரஸ் அமைதியாக இருந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தி, வாக்காளர்கள் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்."

இவ்வாறு மோடி தெரிவித்தார்.


Next Story