பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் பதிவான விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் பதிவான விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 18 April 2024 2:09 PM IST (Updated: 18 April 2024 2:44 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது, 4 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு கூடுதல் வாக்கு பதிவாகி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காசர்கோடு,

கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அரசியல் களம் பரபரப்படைந்து உள்ளது. இந்த நிலையில், கேரளாவின் காசர்கோடு நகரில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதில், 4 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு கூடுதல் வாக்கு பதிவாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு முறை வாக்குப்பதிவு செலுத்தினால், பா.ஜ.க.வுக்கு 2 வாக்குகள் விழுந்திருக்கின்றன. வி.வி.பாட் இயந்திரத்தில் இரண்டு ஒப்புகை சீட்டுகள் பதிவாகியுள்ளன.

இதேபோன்று, பா.ஜ.க.வின் தாமரை சின்னத்திற்கு வாக்கு செலுத்தப்படாதபோதும் கூட, அந்த 4 வி.வி.பாட் இயந்திரங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஒரு ஒப்புகை சீட்டு வந்துள்ளது என புகார் எழுந்தது. எதிர்க்கட்சிகள் மத்தியில் இது சலசலப்பை ஏற்படுத்தியது.

வாக்குப்பதிவின்போது பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் விழும் வகையில் வேலை செய்தால் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி மீண்டும் சந்தேகமும், கேள்வியும் எழுந்தன.

இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் நடைமுறையில் புனித தன்மை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கூறிய நீதிபதிகள் அமர்வு, நேர்மையான மற்றும் வெளிப்படை தன்மை வாய்ந்த தேர்தலை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக விளக்கும்படியும் ஆணையத்திடம் கேட்டு கொண்டது.


Next Story