சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது - சத்யபிரதா சாகு பேட்டி


சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது - சத்யபிரதா சாகு பேட்டி
x
தினத்தந்தி 26 March 2024 2:31 PM IST (Updated: 26 March 2024 4:49 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் தேர்தலை நடத்த முடிகிறது. தேசிய சராசரியை விட தமிழகத்தில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. ஊரகப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாது ஓட்டளிக்க வேண்டும். ஜனநாயக கடமையை தவற விடாதீர்கள்.

வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். 27 லட்சம் புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம். தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.வாக்குப்பதிவு நாளில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.

ஓட்டுச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்கள் ஓட்டளிக்க செல்லும் போது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை. பதற்றமான சூழல் நிலவும் இடத்தில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படை தன்மையோடு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story