சேலம் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஏற்பு
இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் பெறப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீண்ட பரிசீலனைக்குப் பிறகு செல்வகணபதியின் வேட்புமனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வகணபதி தரப்பினர் அளித்த ஆவணங்களை பரிசீலித்த பிறகு அவரது வேட்புமனுவை ஏற்பதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.