அயோத்தியில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ
ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி அயோத்தி செல்கிறார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு 26-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற 7-ம் தேதி 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ மேற்கொள்ளவுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான அம்மாநிலத்தின் எட்டாவாவிலும், மதியம் சீதாபூரிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அதன்பிறகு அயோத்தி செல்கிறார். ராமஜென்மபூமியில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர், லதா சவுக் வரை ரோடு ஷோ மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அயோத்தி குழந்தை ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி இன்று அயோத்தி செல்ல உள்ளார். அங்கு அவருக்கு பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதனால், அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. தனது எம்.பி. தொகுதியான வாராணசிக்கு வரும் பிரதமர் அங்கு தங்கி அதைச் சுற்றியுள்ள தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி அயோத்தி ராமர் கோவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.