'கோடீஸ்வரர்களின் 'கைப்பாவை ராஜா' பிரதமர் மோடி' - ராகுல் காந்தி தாக்கு
நரேந்திர மோடி பிரதமர் அல்ல, அவர் கோடீஸ்வரர்களின் 'கைப்பாவை ராஜா' என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தின்போது, "காங்கிரஸ் கட்சி அம்பானி-அதானி குறித்து விமர்சிப்பதை ஏன் திடீரென நிறுத்திவிட்டது? அம்பானி-அதானியிடம் இருந்து டெம்போ வாகனங்களில் கருப்பு பணத்தை பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டதா? என்பதை மக்களிடம் ராகுல் காந்தி விளக்க வேண்டும்" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நரேந்திர மோடி 'டெம்போ' கோடீஸ்வரர்களின் 'கைப்பாவை ராஜா' என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நரேந்திர மோடி பிரதமர் அல்ல. அவர் ஒரு ராஜா. 'டெம்போ' கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் கைப்பாவை ராஜா" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், "மோடி 21-ம் நூற்றாண்டின் ராஜா. அவர் பிரதமர் அல்ல. அவருக்கு நாடாளுமன்றம், மந்திரிசபை அல்லது அரசியலமைப்பு குறித்து கவலை இல்லை. அவருக்கு பின்னால் இருக்கும் சில தொழிலதிபர்களின் கையில்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.