'வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்' - புஷ்கர் சிங் தாமி
இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருகிறது என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இன்று உத்தர்காசியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உழைத்த உழைப்பிற்கு பலனாக அவரை 3-வது முறை நாம் பிரதமராக்க வேண்டும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஜி-20 மாநாட்டிற்குப் பிறகு இந்தியாவின் ஆற்றலை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.
பிரதமர் மோடியால் கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை பிரதமர் மோடி வளமாக்கி உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை தினந்தோறும் புதுப்புது ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கும் வரமுடியவில்லை, ஊழல் செய்யவும் முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தன.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இன்று இந்தியாவின் பெயரை சொல்வதற்கே பாகிஸ்தான் பயப்படுகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நினைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சம் கொள்கின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதைப் பற்றி காங்கிரஸ் கட்சி பேசியது கிடையாது. பிரதமர் மோடியின் மூலமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதன் கும்பாபிஷேக விழாவிற்கு காங்கிரஸ் கட்சியினர் செல்லவில்லை. கடவுள் ராமரை நினைத்து காங்கிரஸ் கட்சியினர் விரக்தியடைந்துள்ளனர். சனாதன தர்மத்தையும், கலாச்சாரத்தையும் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சியினர் முயன்று வருகின்றனர்."
இவ்வாறு புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.