7-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி


7-ம் கட்ட தேர்தல்:  பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி
x

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உமர் அப்துல்லா பாராமுல்லா தொகுதியிலும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

புதுடெல்லி,

நாட்டில் 18-வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் அல்லது பொது தேர்தலானது 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதன்படி, கடந்த 19-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.

தொடர்ந்து மே 7, மே 13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. ஜூன் 1-ந்தேதி 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த கடைசி கட்ட தேர்தலில் உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் தலா 13 இடங்களிலும், மேற்கு வங்காளத்தில் 9 இடங்களிலும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இவை தவிர, பீகார் (8), ஒடிசா (6), இமாசல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3) மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான சண்டிகார் (1) ஆகிய இடங்களிலும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

மே 7-ந்தேதி 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மூன்றாம் கட்ட தேர்தலும், மே 13-ந்தேதி 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட தேர்தலும், மே 20-ந்தேதி 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதேபோன்று, மே 25-ந்தேதி 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இதில் முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. 2-ம் கட்ட தேர்தலில், 66.71 சதவீதம் வாக்குகளும், 3-ம் கட்ட தேர்தலில், 65.68 சதவீதம் வாக்குகளும், 4-ம் கட்ட தேர்தலில், 69.16 சதவீதம் வாக்குகளும், 5-ம் கட்ட தேர்தலில், 62.2 சதவீதம் வாக்குகளும், 6-ம் கட்ட தேர்தலில், 61.98 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.

7-ம் கட்ட தேர்தலில், முக்கிய வேட்பாளர்கள் பலர் போட்டியிடுகின்றனர். அவர்களில் பிரதமர் மோடி (பா.ஜ.க.) வாரணாசி தொகுதியில் இருந்தும், உமர் அப்துல்லா (ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி) பாராமுல்லா தொகுதியில் இருந்தும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியில் இருந்தும், அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) டையமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர். வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


Next Story