தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி
தமிழகத்தில் நாடாளுமன்றதேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பலகட்ட பணிகளை பக்குவமாக முடித்த தலைவர்கள், தற்போது சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்துக்காக அரசியல் கட்சிகள் அளிக்கும் நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வருகின்றது.
அந்தவகையில், தமிழகத்தில் தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சிகளின் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி ஒப்புதல் பெற்றுள்ளது.
திமுக நட்சத்திரப்பேச்சாளர்கள் பட்டியலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மாநிலங்களவை எம்.பி., திருச்சி சிவா உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பா.ஜ.க.,வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஓபிஎஸ், டிடிவி. தினகரன், ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளைச்சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.