நாடாளுமன்ற தேர்தல்: கோவை தொகுதியில் மும்முனை போட்டி


நாடாளுமன்ற தேர்தல்: கோவை தொகுதியில் மும்முனை போட்டி
x

கோவையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் களத்தில் வலுவாக இருப்பதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது.

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் முதலில் அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் களம் பரபரப்பானது. இந்த நிலையில் கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதால் கோவை பா.ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க.வினர் இப்போதே தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இதனால் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்ததும் பிரசாரம் தீவிரம் அடையும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் கணபதிராஜ்குமார் அறிமுக கூட்டம் காளப்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதேபோல் அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியினர் பகுதி வாரியாக தேர்தல் பணிகளை தொடங்கி செய்து வருகின்றனர்.

தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் 4-ந் தேதி பிரசாரம் செய்கிறார். மேலும் அவர், அன்று இரவு 7 மணியளவில் கொடிசியாவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

கோவையில் போட்டியிடும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. இது தவிர பா.ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

கோவையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் களத்தில் வலுவாக இருப்பதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. தி.மு.க.-அ.தி.மு.க.- பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் பணியாற்ற உள்ளனர்.


Next Story