நாடாளுமன்ற தேர்தல்: திருச்சி கொண்டு செல்லப்பட்ட தபால் ஓட்டுகள்


நாடாளுமன்ற தேர்தல்: திருச்சி கொண்டு செல்லப்பட்ட தபால் ஓட்டுகள்
x

தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான தபால் ஓட்டுகள் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றை அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திருச்சி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலர்கள், போலீசார் உள்பட பலர் பணி நிமித்தமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவி இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்காக தபால் ஓட்டுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தபால் ஓட்டு போடும் பணி கடந்த 11-ந்தேதி முதல் தொடங்கியது. நேற்று முன்தினம் இந்த பணி நிறைவடைந்தது.

பழைய முறைபடி அரசு ஊழியர்கள் அளிக்கும் தபால் ஓட்டுகள் அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியை ஒவ்வொரு தொகுதியிலும் அதற்கான நோடல் ஆபீசர்கள் மேற்கொள்வார்கள். இந்த முறை அப்படி இல்லாமல் இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பதிவான தபால் ஓட்டுகள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் அந்த ஓட்டுகள் தொகுதி வாரியாக பிரித்து அந்தந்த தொகுதிகளின் நோடல் ஆபீசர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான பணி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்காக பெரும்பாலான தொகுதிகளின் அதிகாரிகள் நேற்று காலை முதலே வர தொடங்கினர். அங்கு தபால் வாக்குகள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story