நாடாளுமன்ற தேர்தல்; ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்... அசாமில்
அசாமில் உள்ள இந்த குடும்பத்தில் மொத்தம் 1,200 பேர் உள்ளனர். வரவுள்ள மக்களவை தேர்தலில் 350 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்களாக உள்ளனர்.
சோனித்பூர்,
அசாமில் உள்ள 14 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதில், ஏப்ரல் 19-ந்தேதி மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. ரங்கப்பாரா சட்டசபை தொகுதி மற்றும் சோனித்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் இந்த மாவட்டம் வருகிறது. இந்த நிலையில் நடப்பு மக்களவை தேர்தலில், பகதூரின் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர்.
இதில் என்ன விசேஷம் என்றால், அந்த ஊரிலேயே ஒரே குடும்பத்தில் மிக அதிக அளவிலான வாக்காளர்களை கொண்டது இவருடைய குடும்பம். ரான் பகதூர் தபாவுக்கு 5 மனைவிகள் உள்ளனர். 12 மகன்கள் மற்றும் 9 மகள்களும் உள்ளனர்.
இவருடைய குடும்பத்தில் மொத்தம் 1,200 பேர் உள்ளனர். எனினும், வரவுள்ள மக்களவை தேர்தலில் 350 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்களாக உள்ளனர் என அவருடைய மகன் சர்கி பகதூர் தபா கூறினார்.
1997-ம் ஆண்டு ரான் பகதூர் காலமானார். ரான் பகதூருக்கு 150 பேரக்குழந்தைகள் உள்ளனர். எனினும், மாநில மற்றும் மத்திய அரசுகளின் நலத்திட்ட பலன்கள் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று மகன் சர்கி பகதூர் கூறியுள்ளார். சர்கி பகதூர் தபாவுக்கு (வயது 64) 3 மனைவிகள் மற்றும் 12 குழந்தைகள் உள்ளனர்.