பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் இவ்வளவா...? அதிர வைக்கும் பிரசாந்த் கிஷோர்
தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கடி பயணம் செய்து கட்சியை பலப்படுத்தி உள்ளதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து தனது கணிப்புகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், "தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் மற்றும் கேரளாவில் மொத்தம் 204 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் பா.ஜனதாவால் 50 இடங்களை தாண்ட முடியவில்லை. ஆனால் இந்த முறை இது மாறும். தெலுங்கானாவில் பா.ஜனதா முதல் அல்லது 2-வது இடத்தில் வரும்.
ஒடிசாவில் நிச்சயம் முதலிடம்தான். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா முதலிடத்தைப் பிடிக்கப்போகிறது என்பது நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும். கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த கடந்த ஆண்டுகளில் பா.ஜனதா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் அடிக்கடி பயணம் செய்து கட்சியை பலப்படுத்தி உள்ளனர்.
வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் தங்கள் கோட்டையாக கருதப்படும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 100 இடங்களையாவது எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் இழப்பதை உறுதி செய்ய முடிந்தால்தான் பா.ஜனதாவுக்கு நெருக்கடி ஏற்படும்.
ஆனால் அதுவும் நடக்காது. இந்த பகுதிகளில் பா.ஜனதா தனது ஆதிக்கத்தை பெற முடியும். மொத்தத்தில் இந்த தேர்தலில் பா.ஜனதா 300 இடங்களுக்கு மேல் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. எனினும் 370 இடங்கள் என்ற அந்த கட்சியின் இலக்கு நிறைவேற வாய்ப்பு இல்லை.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை சுமார் 350 தொகுதிகளில் தங்களுக்குள்ளேயே போட்டியிடுகின்றனர். அவர்களிடம் கருத்தாக்கமோ, பிரதமர் முகமோ, நிகழ்ச்சி நிரலோ இல்லை. இதனால் பா.ஜனதாவை தோற்கடிப்பது கடினம்.
மத்தியில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அடுத்தடுத்த ஆண்டுகளில் சில சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்தது. இதைப்போல பணமதிப்பு நீக்கம், கொரோனா போன்ற நேரங்களில் பின்னடைவை சந்தித்தது.
ஆனால் இந்த வாய்ப்புகளை பயன்படுத்த எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தவறி விட்டது. இந்த பின்னடைவில் இருந்து மீண்டெழ பிரதமர் மோடியை அனுமதித்து விட்டன. நீங்கள் கேட்சுகளை தொடர்ந்து தவறவிட்டுக்கொண்டே இருந்தால், பேட்ஸ்மேன் அதுவும் சிறந்த பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிப்பார்" என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.