எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை புதிய உத்தியுடன் எதிர்கொள்ளும் நவீன் பட்நாயக்


எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை புதிய உத்தியுடன் எதிர்கொள்ளும் நவீன் பட்நாயக்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 24 May 2024 5:05 AM IST (Updated: 24 May 2024 1:02 PM IST)
t-max-icont-min-icon

எதிர்கட்சிகள் தங்களது பிரசாரத்தில் நவீன்பட்நாயக் அரசு, ஒடிசாவை பின்னுக்கு தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.

ஒடிசா,

ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து 5 முறை முதல்-மந்திரியாக இருந்து வரும் நவீன் பட்நாயக். மிகச்சிறந்த நிர்வாகி. எளிமையானவர் என்ற பெயர் அவருக்கு உண்டு.

அவர் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் ஹிஞ்சிலி, காந்த்பாஞ்ச் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் வியூகத்திலும், பிரசார களத்திலும் அவருக்கு தளபதியாக வி.கே.பாண்டியன் உள்ளார். இந்தமுறையும் கட்சியை வெற்றி பெறச் செய்து, 6-வது முறையாக முதல்-மந்திரியாக நவீன்பட்நாயக் பதவி ஏற்க செய்யும் பொறுப்பில் பம்பரமாக சுற்றி வருகிறார்.

அதே நேரம் ஒடிசாவை எப்படியும் கைப்பற்றியே தீரவேண்டும் என்று பா.ஜனதாவும் வரிந்து கட்டிக்கொண்டு உள்ளது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தங்களது பிரசாரத்தில் நவீன்பட்நாயக் அரசு, ஒடிசாவை பின்னுக்கு தள்ளிவிட்டார் என்று குற்றம் சாட்டி வருகிறது. அவர்களின் எதிர்ப்பு கணைகளை சமாளிக்க முதல்-மந்திரி நவீன் பட்நாயக் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார்.

பிரசார கூட்டங்களுக்கு செல்லும் அவர், 'எனது ஆட்சி எப்படி இருக்கிறது?... நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?... உங்கள் முன்னேற்றத்துக்கு நான் பாடுபடுவேன் என்று நம்புகிறீர்களா?' என்று மக்களை நோக்கி கேள்வி கேட்கிறார்.

இதற்கு மக்களும் பதில் அளிக்கிறார்கள். அவரது இந்த புதிய பாணி பிரசாரம் மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. ஒருபுறம் அனல் பறக்கும் பிரசாரம், மறுபுறம் மக்களை கவரும் வகையிலான புதிய பாணி பிரசாரம் என்று ஒடிசா மாநில தேர்தல் பிரசார களம் உள்ளது. மக்கள் எதை எடுக்கப்போகிறார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி தெரியும்.


Next Story