மத்திய பிரதேசம்: தீயில் எரிந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் - 4 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு
பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 மக்களவை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ந்தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ந்தேதியும் நடந்து முடிந்தது. இதையடுத்து 3-ம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து 4-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 13-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தில் வாக்குகள் பதிவான இயந்திரங்களை ஊழியர்கள் பஸ் மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது இரவு 11 மணியளவில் திடீரென அவர்கள் சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக பஸ்சில் இருந்து அனைவரும் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் பஸ்சில் இருந்த 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில், பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் வரும் 10-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.