நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 60.48 சதவீத வாக்குப்பதிவு


நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 60.48 சதவீத வாக்குப்பதிவு
x

நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

டெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நேற்று 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இந்நிலையில், 5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்குவங்காளத்தில் 76.05 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மராட்டியத்தில் 54.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story