நாடாளுமன்ற தேர்தல்: ஒடிசாவில் களம் இறங்கும் இந்திய ஆக்கி அணி கேப்டன்கள்


நாடாளுமன்ற தேர்தல்: ஒடிசாவில் களம் இறங்கும் இந்திய ஆக்கி அணி கேப்டன்கள்
x

கோப்புப்படம்

ஒடிசா மாநிலத்தில் தேர்தலில் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன்கள் களம் இறங்க உள்ளனர்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் ஆக்கி விளையாட்டு மிகவும் பிரபலமானதாக உள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமான வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வாகி புகழின் உச்சியை அடைந்துள்ளனர். குறிப்பாக அங்குள்ள சுந்தர்கர் மாவட்டம் இந்திய அணிக்கு ஏராளமான ஆக்கி வீரர்களை தந்துள்ளது.

இப்படியான சூழலில் ஆக்கி வீரர்களின் புகழை தேர்தல் களத்தில் பயன்படுத்த அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒடிசா தேர்தல் போர் களத்தில் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன்கள் 2 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆக்கி இந்தியாவின் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான திலீப் டிர்கி மற்றும் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் பிரபோத் டிர்கி ஆவர். திலீப் டிர்கி சுந்தர்கர் மக்களவை தொகுதியில் ஆளும் பிஜூ ஜனதா தள வேட்பாளராகவும், அவரது ஜூனியரான பிரபோத் டிர்கி சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள தல்சாரா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

46 வயதான திலீப் டிர்கி, சுந்தர்கர் மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா எம்.பி.யுமான ஜுவல் ஓரமை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேபோல் சுந்தர்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகளில் ஒன்றான தல்சாரா சட்டசபை தொகுதியில் 39 வயதான பிரபோத் டிர்கி, அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான பா.ஜனதாவை சேர்ந்த பவானி சங்கர் போபியை எதிர்த்து போட்டியிடுகிறார்.


Next Story