நாடாளுமன்ற தேர்தல்; தொகுதி கண்ணோட்டம்-ஸ்ரீபெரும்புதூர்


நாடாளுமன்ற தேர்தல்; தொகுதி கண்ணோட்டம்-ஸ்ரீபெரும்புதூர்
x

சென்னை புறநகர் பகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொழில் நகரமாக திகழ்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. ராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமி ஸ்ரீபெரும்புதூர். இங்கு ராமானுஜருக்கு மணிமண்டபம் அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளுர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

தி.மு.க. கோட்டையாக

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 1967-ம் ஆண்டு சிவசங்கரன் (தி.மு.க.), 1971-ம் ஆண்டு டி.எஸ்.லட்சுமணன், (தி.மு.க.). 1977-ம் ஆண்டு சீராளன் ஜெகநாதன், (அ.தி.மு.க.) வெற்றி பெற்றனர். 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் களம் கண்டு மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 1989, 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மரகதம் சந்திரசேகர் வெற்றி பெற்று தொகுதி காங்கிரஸ் கைவசம் இருந்தது. 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த நாகரத்தினம் வெற்றி பெற்றார். 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றார்.

1999, 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.என்.ராமசந்திரன் வெற்றி பெற்றார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலில் இது வரை தி.மு.க. 8 முறை வெற்றி பெற்று தி.மு.க. கோட்டையாக திகழ்கிறது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் மத அடிப்படையில் இந்துக்கள் அதிக அளவில் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஜாதி அடிப்படையில் வன்னியர்கள், ஆதி திராவிடர் அதிக அளவில் உள்ளனர். அடுத்தபடியாக முதலியார், நாயுடு, ரெட்டியாரும் உள்ளனர்.

ரெயில் போக்குவரத்து

சென்னை புறநகர் பகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. எனவே ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை மையப்படுத்தி பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அடையாறு கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழகம் மட்டுமல்ல. வெளிமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகிறார்கள். ராஜீவ் காந்தி நினைவிடம், பல்லவர்கள் ஆண்ட பல்லாவரம் என பல்வேறு பகுதிகள் உள்ளன. ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் என 6 சட்டமன்றதொகுதிகள் உள்ளன. தொழில் துறையின் தலைநகரமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூர் தமிழகத்தில் அதிக அளவில் பன்னாட்டு தொழிற்சாலைகளை கொண்ட தொகுதியாகும்.

சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதும் இந்தத் தொகுதிதான். விவசாயம், ஆட்டோ மொபைல் தொழில்கள் இங்கு பிரதானமாக உள்ளது. உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களும் இங்கு அதிக அளவில் உள்ளது.

வாகன நெரிசலை தவிர்க்க

பெருங்களத்தூர்-கோயம்பேடு - ஸ்ரீபெரும்புதூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் வாகனங்கள், பொருட்களை துறைமுகத்துக்கு கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூரில் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும். சென்னை புறநகர் பகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. இங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்வதற்குள் உயிர் சேதம் ஏற்படுகிறது. இந்த தொகுதியை மையப்படுத்தி அனைத்து வசதிகள் கொண்ட பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. முக்கிய தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. கிடப்பில் உள்ள செம்பராம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்பது ஸ்ரீபெரும்புதூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு வெற்றி பெற்று வாகைசூடினார்.

முதல் 5 இடத்தை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

டி.ஆர்.பாலு (தி.மு.க.) 7,93,281

வைத்தியலிங்கம் (பா.ம.க.) 2,85,326.

ஸ்ரீதர் (மக்கள் நீதி மய்யம்) 1,35,525.

மகேந்திரன் (நாம் தமிழர் கட்சி) 84,979.

நாராயணன் (அ.ம.மு.க.) 41,497

வாக்காளர்கள் எவ்வளவு?

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்காளர்கள் 23,58,526

ஆண்கள் 11,69,344

பெண்கள் 11,88,754

இதர வாக்காளர்கள் 428


Next Story