நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்-சேலம்


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்-சேலம்
x
தினத்தந்தி 2 April 2024 3:04 PM IST (Updated: 2 April 2024 3:59 PM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த கால தேர்தல் வரலாற்றை புரட்டி பார்க்கும் போது காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், த.மா.கா ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

மாம்பழம் நகரம் என பெயர் எடுத்தாலும் விவசாயம், ஜவுளி, கைத்தறி, வெள்ளிக்கொலுசு, ஜவ்வரிசி தொழில் அதிகம் நிறைந்தது சேலம் நாடாளுமன்ற தொகுதி. 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சேலம் தொகுதியின் பெயரிலேயே மாவட்ட தலைநகரின் பெயரும் உள்ளது.

இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக உருவாகியது சேலம் மாவட்டம் தான். நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் திகழ்ந்தது. தற்போது அவை அனைத்தும் பிரிக்கப்பட்டு 11 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி என 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

6 முறை காங்கிரஸ் வெற்றி

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த கால தேர்தல் வரலாற்றை புரட்டி பார்க்கும் போது காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், த.மா.கா ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

அதாவது 1952, 1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.வீ.ராமசாமி தொடர்ச்சியாக 3 முறை வெற்றி வாகை சூடியுள்ளார். 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ராஜாராம் வெற்றி பெற்றார். 1971-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணனும், 1977-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணனும், 1980-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த பழனியப்பனும் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து 1984, 1989, 1991-ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேவதாசும், 1998-ம் ஆண்டு தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தியும் வெற்றி பெற்றனர்.

தி.மு.க.- அ.தி.மு.க.

அதன்பிறகு 1999-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட செல்வகணபதியும், 2004-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.வி.தங்கபாலுவும், 2009-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரான செம்மலையும், 2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த பன்னீர்செல்வமும் வெற்றி பெற்றனர். 2019-ம் ஆண்டு தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. சார்பில் களம் கண்ட எஸ்.ஆர்.பார்த்திபன் 6 லட்சத்து 6 ஆயிரத்து 302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4 லட்சத்து 59 ஆயிரத்து 376 வாக்குகள் பெற்றார்.

சாதி வாரியாக...

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு சாதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பரவலாக இருந்தாலும் வன்னியர் சமுதாய வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வன்னியர் 38 சதவீதம், ஆதிதிராவிடர் 18 சதவீதம், செட்டியார், கொங்கு வேளாள கவுண்டர் தலா 7 சதவீதம், முதலியார், முஸ்லிம் தலா 4 சதவீதம், கிறிஸ்தவர் 3 சதவீதம், நாடார், சோழிய வேளாளர், நாயுடு, செம்படவர், உடையார், மலையாளி ஆகியோர் தலா 2 சதவீதமும், இதர சாதியினர் 7 சதவீதம் இடம் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்களில் கூறப்படுகிறது. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தொகுதியில் 51 சதவீதம் மக்கள் நகர்புறங்களிலும், 49 சதவீதம் மக்கள் கிராமப்புறங்களிலும் வசித்து வருகிறார்கள்.

வளர்ந்து வரும் நகரம்

தமிழகத்தில் கோவை, திருப்பூர், திருச்சிக்கு அடுத்தபடியாக தொழில் வளர்ச்சியில் வளர்ந்து வரும் நகரமாக சேலம் விளங்குகிறது. சாலை, ரெயில், விமானம் ஆகிய அனைத்து போக்குவரத்து வசதியும் கொண்ட தொகுதியாக உள்ளதால் தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாமக்கல்லுக்கு அடுத்தபடியாக சேலத்தில் தான் லாரி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் சேலம் என்றாலே மாம்பழம் தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது சேலம் மாநகரில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதால் மேம்பால நகரம் என்று சமீபகாலமாக அழைக்கப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் ஓரளவுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தாலும் சேலத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளும் நிலவி வருகின்றன.

மக்களின் எதிர்பார்ப்பு

சேலம் மாவட்டத்தில் 14 தாலுகாக்களில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதை இரண்டாக பிரித்து ஆத்தூர் அல்லது எடப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். சேலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சேலத்தை சுற்றி புறவழிச்சாலை (ரிங்ரோடு), புதிதாக லாரி மார்க்கெட் அமைக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சேலம் புறநகர் பகுதியில் பஸ் போர்ட் உருவாக்க வேண்டும். ஓமலூரில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுவதால் அங்கு மலர் சந்தை அமைத்து கொடுக்க வேண்டும். சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பகலில் ரெயில் சேவையை தொடங்க வேண்டும். சேலத்தை தலைமையிடமாக கொண்டு ரெயில்வே கோட்டம் செயல்படுவதால் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் ரெயில்கள் இயக்க வேண்டும். சேலம் முதல் விருதாச்சலம் வரை செல்லும் பயணிகள் ரெயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

மெட்ரோ ரெயில் சேவை

கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மூட வேண்டும். திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் கலக்காமல் பாதுகாத்து, சுத்தம் செய்ய வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வருதல், சேலம் விமான நிலையத்தில் இருந்து சீரடி மற்றும் திருப்பதிக்கு விமான சேவை இயக்க வேண்டும். கருப்பூரில் இருந்து ஜங்ஷன், புதிய பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம், பழைய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க சேலத்தில் அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்கா அமைக்கும் பணியையும், இரும்பாலையில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம் பணியையும் உடனே தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கும் பட்சத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜாகீர்அம்மாபாளையம் தகவல் தொழில்நுட்ப பூங்காவை மேம்படுத்த வேண்டும். அணைமேடு பகுதியில் நடந்து வரும் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வெள்ளி கொலுசு தொழிலை மேம்படுத்தும் வகையில் அரியாகவுண்டம்பட்டியில் கட்டப்பட்டு வரும் பன்மாடி கட்டிடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது வெள்ளி தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களின் விவரம் வருமாறு:-

எஸ்.ஆர்.பார்த்திபன் (தி.மு.க.)-6,06,302

கே.ஆர்.எஸ்.சரவணன் (அ.தி.மு.க.)-4,59,376

பிரபு மணிகண்டன் (ம.நீ.ம)-.58,662

எஸ்.கே.செல்வம் (அ.ம.மு.க.)-52,332

ராஜா அம்மையப்பன் (நாம் தமிழர் கட்சி)- 33,890

வெற்றி யார் கையில்?

மறைந்த வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்த காலத்தில் சேலம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக திகழ்ந்தது. அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மற்றும் ஆட்சி மாற்றத்தால் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றார். 2011, 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வே வெற்றி வாகை சூடியது. ஆனால் 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் இந்த முறையும் தி.மு.க. போட்டியிட முடிவு செய்து மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதியை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

அதேபோல் அ.தி.மு.க. சார்பில் ஓமலூரை சேர்ந்த விக்னேஷ் புதுமுகமாக களத்தில் இறக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. சார்பில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மனோஜ்குமாரும் களத்தில் உள்ளனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால் வாக்காளர்களின் ஓட்டுகள் பரவலாக பிரியும். இதனால் வெற்றி யார் கையில் என்பதை கணிப்பது கடினம். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதால் அவர்களும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளில் ஒன்றாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இருப்பினும் வெற்றி யார் கையில் என்பது வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி தெரிந்துவிடும்.+


வாக்காளர்கள் விவரம்

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 8,23,336. பெண் வாக்காளர்கள் 8,25,354. மூன்றாம் பாலினத்தினர் 221. சட்டசபை தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

சேலம் வடக்கு 2,67,722

சேலம் தெற்கு 2,49,924

சேலம் மேற்கு 2,98,347

ஓமலூர் 2,93,597

எடப்பாடி 2,82,892

வீரபாண்டி 2,56,429



Next Story