நாடாளுமன்ற தேர்தல்- தொகுதி கண்ணோட்டம்; ராமநாதபுரம்
தமிழகத்தில் நீண்ட நெடிய கடற்கரை பகுதியை கொண்டது, ராமநாதபுரம் மாவட்டம். ராமேசு வரம் ராமநாதசுவாமி கோவில், தேவிபட்டினம் நவகிரக கோவில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள், உத்தரகோசமங்கை மரகதநடராஜர் கோவில், ஓரியூர் தேவாலயம், ஏர்வாடி தர்கா உள்ளிட்ட ஆன்மிக தலங்களும் இங்குள்ளன.
அது மட்டுமின்றி பாம்பன் ரெயில் பாலம், பாம்பன் ரோடு பாலம், தனுஷ்கோடி, குந்துக்கால் போன்ற கடற்கரை சுற்றுலா தலங்களும் உண்டு. ராமேசுவரத்தில் பிறந்த அப்துல்கலாம் நம் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து பெருைம சேர்த்தவர். ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் அவரது நினைவிடமும், மணிமண்டபமும் அமைந்துள்ளது. ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்களை கொண்ட பகுதி என்பதால் வெளி இடங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருவதுண்டு. மீன்பிடி தொழிலில் ஏராளமான மீனவ மக்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால், இலங்கை கடற்படை கொடுக்கும் நெருக்கடிகள் மீனவ மக்களை பெரிதும் பாதித்துள்ளன. மீன்பிடி தொழிலை போன்று விவசாயமும் முக்கிய தொழில். இதுதவிர நெசவு, அடுப்புக்கரி தயாரிக்கும் பணியிலும் ஏராளமானோர் ஈடுபடுகிறார்கள்.
போதிய மழை இல்லாதது, வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் இந்த மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும், வளைகுடா நாடுகளுக்கும் சென்று வேலை பார்த்து வருகிறார்கள்.
18-வது தேர்தல்
இனி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை பற்றி காணலாம். இத்தொகுதி தற்போது 18-வது தேர்தலை சந்திக்க உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி, திருவாடானை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டத்திலும், திருச்சுழி விருதுநகர் மாவட்டத்திலும் அடங்கி இருக்கும் தொகுதிகள். மற்ற 4 தொகுதிகளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளன.
வெற்றி பெற்ற கட்சிகள்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்று உள்ளன.
இதில் சிறப்பு என்னவென்றால் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வி.ராஜேஸ்வரன் இத்தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணி ஆற்றியுள்ளார்.
இத்தொகுதியில் 1952-ம் ஆண்டு தேர்தலில் நாகப்பசெட்டியார்(காங்கிரஸ்), 1957-ம் ஆண்டு சுப்பையா அம்பலம் (காங்.), 1962-ம் ஆண்டு எம்.அருணாசலம்(காங்.), 1967-ம் ஆண்டு எம்.ஷெரீப்(சுயே.), 1971-ம் ஆண்டு பி.கே.மூக்கையாதேவர்(பார்வர்டு பிளாக்), 1977-ம் ஆண்டு பி.அன்பழகன்(அ.தி.மு.க.), 1980-ம் ஆண்டு எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் (திமு.க.), 1984-ம் ஆண்டு வி.ராஜேஸ்வரன்(காங்), 1989-ம் ஆண்டு வி.ராஜேஸ்வரன்(காங்), 1991-ம் ஆண்டு வி.ராஜேஸ்வரன்(காங்), 1996-ம் ஆண்டு எஸ்.பி.உடையப்பன்(த.மா.கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதே போல் 1998-ம் ஆண்டு வி.சத்தியமூர்த்தி(அ.தி.மு.க.), 1999-ம் ஆண்டு கே.மலைச்சாமி(அ.தி.மு.க.), 2004-ம் ஆண்டு எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன்(தி.மு.க.) 2009-ம் ஆண்டு கே.சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ்(தி.மு.க.), 2014-ம் ஆண்டு அன்வர்ராஜா(அ.தி.மு.க.) வெற்றி பெற்று உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 ஓட்டுகள் பெற்றார். அ.ம.மு.க. வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் 1 லட்சத்து 41 ஆயிரத்து 806 ஓட்டுகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் கோரிக்கைகள்
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே வரப்பிரசாதம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகும். இந்த தண்ணீரும் கிட்டத்தட்ட முழு பலன்தராமல் தற்போது மாற்று திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மழை இல்லாத காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மற்றொரு பெரிய பிரச்சினை இலங்கை கடற்படை ஆகும். இந்த மாவட்ட மக்களின் மற்றொரு முக்கிய கோரிக்கை சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இங்கிருந்து ரெயில்கள் விட வேண்டும் என்கிறார்கள். வேலைவாய்ப்பு, சுய தொழில் கடன், சாலைவசதி, விமான போக்குவரத்து வசதி, மீன்பிடி துறைமுகம், சுற்றுலா மேம்பாடு போன்றவைக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் தெரிவிக்கிறார்கள்.
வெற்றியார் கையில்?
இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி எம்.பி. 2-வது முறையாக போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வேட்பாளராக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சி்ன்னத்தில் போட்டியிடுகிறார். இதுதவிர நாம் தமிழர் கட்சியின் சார்பில் டாக்டர் சந்திரபிரபா களத்தில் உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் களம் இறங்கி இருப்பதால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகிவிட்டது. வாக்காளர்களை குழப்ப அவர் பெயருடைய மேலும் 5 பேர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. எனவே பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 6 பேர், ராமநாதபுரம் களத்தில் உள்ளனர். முக்குலத்தோர், தேவேந்திரகுலவேளாளர்கள், மீனவர்கள், முஸ்லிம்கள், யாதவர்கள், சவுராஷ்டிரா சமுதாயத்தினர், நாடார், பிள்ளைமார், முதலியார், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். தி.மு.க. கூட்டணியோடு மக்கள் நீதி மய்யம் இம்முறை இணைந்து இருக்கிறது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், கடந்த முறையைவிட இப்போது எங்கள் பலம் இன்னும் அதிகரித்து இருக்கிறது என அந்த அணியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே இத்தொகுதியில் நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். கிராமங்களில் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுகள் அதிகம் என அ.தி.மு.க.வினர் பிரசார களத்தில் தெரிவித்தார்கள். ஓ.பன்னீர்செல்வத்துக்கு இத்தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது, பா.ஜனதா கூட்டணி பலம் தங்களுக்கு சாதகம் என்றும், கடந்த முறை அ.ம.மு.க. சுமார் 1½ லட்சம் வாக்குகளை பெற்று இத்தொகுதியில் கவனத்தை ஈர்த்ததால், அதுவும் தங்களுக்கு சாதகம் என அவரது தரப்பினர் தெரிவிக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியும் பிரசாரத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இவர்களில் யார் மகுடம் சூடிக்கொள்ளப் போகிறார்கள் என்பது ஓட்டு எண்ணிக்கயின்போது தெரிந்துவிடும்.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி வாகை சூடினார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
நவாஸ்கனி(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)---- 4,69,943
நயினார் நாகேந்திரன்( பா.ஜனதா)----------- 3,42,821
வ.து.ந.ஆனந்த்(அ.ம.மு.க.)----------------1,41,806
புவனேஸ்வரி(நாம் தமிழர் கட்சி)------ -------46,385
விஜய பாஸ்கர்(மக்கள் நீதி மய்யம்)------------14,925