'பிரதமர் மோடியின் வயது குறித்து கெஜ்ரிவால் கூறியது சரிதான்' - சசி தரூர்


பிரதமர் மோடியின் வயது குறித்து கெஜ்ரிவால் கூறியது சரிதான் - சசி தரூர்
x

பிரதமர் மோடியின் வயது குறித்து கெஜ்ரிவால் சுட்டிக்காட்டிய முரண்பாடு சரியானதுதான் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், பிரதமர் மோடி தனது 75-வது வயதில் ஓய்வு பெறுவார் என்றும், அமித்ஷாவை அடுத்த பிரதமராக்க மோடி பிரசாரம் செய்து வருகிறார் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் கெஜ்ரிவால் கூறியதை திட்டவட்டமாக மறுத்த அமித்ஷா, மோடியே பிரதமராக நீடிப்பார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வயது குறித்து கெஜ்ரிவால் கூறியது சரிதான் என திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னதாக அனைவரும் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக அமித்ஷா கூறியிருந்தார். தற்போது 2029 வரை மோடி பிரதமராக நீடிப்பார் என்று அமித்ஷா கூறுகிறார். இதில் எது உண்மை என்பதை அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்க வேண்டும்.

இந்த முரண்பாடு குறித்து கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியது சரிதான். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி அவருக்கு 75 வயது ஆகுமானால், செப்டம்பர் 2025-க்கு பிறகு புதிய பிரதமர் வருவாரா? அல்லது மோடிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுமா? எப்படி இருந்தாலும் நாம் செப்டம்பர் 2025 வரை காத்திருக்க தேவையில்லை, வரும் ஜூன் மாதத்திலேயே பிரதமர் பதவியில் மாற்றம் வரப்போகிறது" என்று தெரிவித்தார்.


Next Story