கார்த்தி சிதம்பரம் மனைவி மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு


கார்த்தி சிதம்பரம் மனைவி மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு
x

தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிவகங்கை,

தமிழகத்தில் வரும் 19-ந்தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் இறுதி நேர வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி இன்று மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து அவர் பிரசாரம் செய்யச் சென்றார்.

அப்போது ஸ்ரீநிதியிடம் தேர்தல் அதிகாரிகள் பிரசாரம் செய்வதற்கான அனுமதிக் கடிதம் குறித்து கேட்டபோது, ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தை காட்டினார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டதால், அவர்களுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் வார்டு வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் தேர்தல் அதிகாரி செந்தில்வேல் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட 60 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.




Next Story