முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் டாப்-10 பணக்கார வேட்பாளர்கள்: தமிழகத்தில் மட்டும் 5 பேர்
மிகவும் பணக்கார வேட்பாளராக மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரியின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான நகுல் நாத் திகழ்கிறார்.
புதுடெல்லி:
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தங்களது சொத்துகள், குற்றப் பின்னணி அல்லது வழக்குகள், நிதி நிலைமை உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளராக மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரியின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான நகுல் நாத் திகழ்கிறார். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு ரூ.717 கோடி ஆகும்.
இவரைத் தொடர்ந்து தமிழகத்தின் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோக் குமார் உள்ளார். இவர் தனக்கு ரூ.662 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்து, தமிழகத்தின் சிவகங்கையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் ( ரூ.304 கோடி), உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க. வேட்பாளர் மாலா ராஜ்ய லட்சுமி ஷா (ரூ.206 கோடி), உத்தர பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மஜித் அலி (ரூ.159 கோடி), தமிழகத்தின் வேலூரில் பாஜ.க. சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (ரூ.152 கோடி), தமிழகத்தின் கிருஷ்ணகிரி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் (ரூ.135 கோடி), மேகாலயாவின் காங்கிரஸ் வேட்பாளர் வின்சென்ட் எச்.பாலா (ரூ.125 கோடி), ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. வேட்பாளர் ஜோதி மிர்தா (ரூ.102 கோடி), தமிழகத்தின் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் (ரூ.96 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்த டாப்-10 பணக்கார வேட்பாளர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.