'கோவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை' - அண்ணாமலை


கோவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை - அண்ணாமலை
x
தினத்தந்தி 19 April 2024 8:54 PM IST (Updated: 3 May 2024 12:13 PM IST)
t-max-icont-min-icon

எந்த அடிப்படையில் பெயர்களை நீக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை,

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கோவையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், சோகமான விஷயம் என்னவென்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் பெயர்களை நீக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கணவருக்கு வாக்கு இருக்கிறது, ஆனால் மனைவிக்கு இல்லை என்று கூறுகிறார்கள். ஒரு வாக்குச்சாவடியில் 830 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இத்தனை பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது என்றால் தேர்தல் ஆணையம் எத்தகைய பணியை செய்தார்கள் என்பது தெரியவில்லை.

மலேசியா, மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பலருக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா? என்ற சந்தேகமும் எங்களுக்கு வருகிறது. இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் உற்சாகமாக வந்து வாக்கு செலுத்தியிருக்கிறார்கள்."

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.



Next Story