சீனாவில் உள்ள இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால்... அதிரடி காட்டிய ராஜ்நாத் சிங்
இந்தியாவின் கவுரவத்திற்கு தீங்கு ஏற்படுத்த எவரேனும் முயன்றால், அதற்கு இன்றைய இந்தியா பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
நம்சாய்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலுடன் ஒடிசா, அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கான தேர்தலும், சேர்த்து நடத்தப்படுகிறது. இதன்படி, அருணாசல பிரதேச சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்குகிறது. ஜூன் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தின் நம்சாய் நகரில் பொது பேரணி ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, பெயர்களை மாற்றுவதனால் ஒன்றும் நடந்து விடப்போவதில்லை என சீனாவை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியது. அதனை தன்னுடைய வலைதளத்திலும் பதிவிட்டது. பெயர்களை மாற்றுவதனால் ஒன்றும் நடந்து விடப்போவதில்லை என அண்டை நாடான சீனாவுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
சீனாவின் சில மாகாணங்கள் மற்றும் சில பகுதிகளின் பெயர்களை நாளை நாங்கள் மாற்றினால், அப்படி செய்வதனால், அந்த பகுதிகள் எல்லாம் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிடுமா? என கேள்வி எழுப்பினார்.
அடல் பிகாரி வாஜ்பாய் கூறும்போது, வாழ்க்கையில் நண்பர்கள் மாறுவதுண்டு. ஆனால், அண்டைவீட்டுக்காரர்கள் மாறுவதில்லை என கூறுவது வழக்கம். எங்களுடைய அனைத்து அண்டை நாடுகளுடனும், நல்ல உறவை நாங்கள் பராமரிக்க வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பம்.
ஆனால், இந்தியாவின் கவுரவத்திற்கு தீங்கு ஏற்படுத்த எவரேனும் முயன்றால், அதற்கு இன்றைய இந்தியா பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தியாவை, 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவோம் என்று உறுதியேற்றுள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒவ்வொருவரும் தங்களுடைய முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.