'பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும்' - காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்
நாடு முழுவதும் அனைத்திலும் ஒன்று மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை கொண்டுவந்து விடுவார்கள் என விஜய் வசந்த் தெரிவித்தார்.
கன்னியாகுமரி,
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் இறுதி நேரம் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலவிளை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது பேசிய விஜய் வசந்த், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்பவர்கள், இனி ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு என்று சொல்லி நாடு முழுவதும் அனைத்திலும் ஒன்று மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை கொண்டுவந்து விடுவார்கள். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும்.
பொய்யான வாக்குறுதிகளையும், பிரிவினைவாத கொள்கைகளையும் கொண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் தொழிலாளர்கள் வாழ்வு முன்னேற வேண்டும் என்றால் மத்தியில் 'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்."
இவ்வாறு விஜய் வசந்த் பேசினார்.