ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற கனவை நிறைவேற்றுவோம் - பிரதமர் மோடி
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற கனவை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பனாஜி,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, கோவாவில் மொத்தமுள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவாவில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். வாஸ்கோ நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, 2 கட்ட தேர்தல் நடைபெற்றபின்னர் களத்தில் உள்ள கருத்துக்கணிப்பில் நாம் (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என தெரிகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கோவா அரசு 100 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் டிரைலர்தான், நமது அடுத்த அரசில் இன்னும் நிறைய பணிகள் செய்யப்பட உள்ளன. மீனவர்கள் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் மீன்வளத்துறை அமைச்சரவையை உருவாக்கினேன். மீனவர்களுக்கான காப்பீட்டை மேலும் அதிகரிப்பேன். கோவாவில் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்கு நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். அது என்னவென்றால் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற உங்கள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.