அம்பானி-அதானியிடம் இருந்து ராகுல் காந்தி எவ்வளவு கருப்பு பணம் வாங்கினார்? பிரதமர் மோடி கேள்வி
தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை தவறாக பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
ஐதராபாத்:
தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார். ராகுல் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் இளவரசர் கடந்த ஐந்து ஆண்டுகளாக, 'ஐந்து தொழிலதிபர்கள்' என்று முழக்கமிட்டதை நீங்கள் (மக்கள்) பார்த்திருப்பீர்கள். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை தவறாக பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்.
இந்த தேர்தலில் அம்பானி-அதானியிடம் இருந்து அவர் எவ்வளவு பணம் வாங்கினார்? எவ்வளவு கறுப்புப் பணம் பெற்றார்? ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரசுக்கு வந்துவிட்டதா?
அம்பானி-அதானியை தாக்கி பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்கள்.. என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? ஐந்து ஆண்டுகளாக அம்பானி-அதானியை தவறாக பேசிவிட்டு, ஒரே இரவில் நிறுத்திவிட்டீர்கள். அதாவது, உங்களுக்கு ஏதோ கிடைத்துள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.