தேர்தல் பிரசார இறுதி நாளில் கூடுதல் கால அவகாசம் - சத்யபிரதா சாகு


தேர்தல் பிரசார இறுதி நாளில் கூடுதல் கால அவகாசம் - சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 15 April 2024 4:47 PM IST (Updated: 15 April 2024 6:08 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெயில் காரணமாக தேர்தல் பிரசார இறுதி நாளன்று கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக சத்யபிரதா சாகு தெரித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 17ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரசாரம் செய்வதற்கான கடைசி நாளன்று ஒரு மணி நேரம் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வழக்கமாக இறுதி நாளில் மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில் இந்த முறை கோடை வெயிலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அதன்படி 17ம் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் விதியை மீறி சில அரசியல் தலைவர்கள் பிரசாரம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர்கள் மீதான புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் இரவு 10 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.


Next Story