இறுதிக்கட்டத்தில் தேர்தல் களம்: நாளை மாலையுடன் ஓய்கிறது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம்


இறுதிக்கட்டத்தில் தேர்தல் களம்: நாளை மாலையுடன் ஓய்கிறது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 16 April 2024 5:50 AM IST (Updated: 3 May 2024 12:17 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஏற்கனவே 8-முறை வந்து சூறாவளி பிரசாரம் செய்தார். குறிப்பாக கோவை, சென்னையில் பிரதமர் மோடி வாகனப்பேரணி நடத்தினார். வேலூர், கோவை மேட்டுப்பாளையத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசி, பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

நேற்று 9-வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். முன்னதாக அவர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டி தனியார் பள்ளிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம், பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடைக்கு வந்தார்.

பிரசார மேடைக்கு வந்ததும், அங்கு திரண்டு இருந்தவர்கள் வாழ்த்துக்கோஷம் எழுப்பினர். வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (நெல்லை), பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), ஜான்பாண்டியன் (தென்காசி), ராதிகா சரத்குமார் (விருதுநகர்), எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தூத்துக்குடி) மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.

அதுபோல் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தான் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு பிரசாரம் செய்வதற்காக மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியான தாளூருக்கு வந்தார்.

அங்குள்ள ஹெலிபேடில், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த ஹெலிகாப்டரை சோதனையிட்டனர். இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய ராகுல்காந்தி அங்கிருந்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார். பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத்தொழிலாளிகளை சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டதால், பிரசார களத்தில் அனல், உச்சத்தைத் தொட்டது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை ஆதரித்து நெய்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து மாதவரத்திலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்தும் பிரசாரம் செய்தனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசேகர், மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதி ஆகியோரை ஆதரித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையிலும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசாரம் செய்தனர்.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை (புதன்கிழமை) மாலையுடன் ஓயும் நிலையில் தமிழக தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, "குறைவான எண்ணிக்கையில் அரசு அலுவலர்கள் உள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்களை மட்டும் பணி அமர்த்த தேர்தல் கமிஷன் சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். கூடுதல் எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் இருக்கும் மற்ற மாவட்டங்களில் கூடுதலாக ஒரு அலுவலர் பணியாற்றுவார்.

வாக்குப்பதிவு அன்று ஏதாவது தனியார் நிறுவனம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவில்லை என்றால் அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி. 'கோடை' சேர்த்து 1950 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் அளிக்கலாம்.

எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு ஜூன் 4-ந்தேதிக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்த முடியுமா? என்றால், தேர்தல் கமிஷன்தான் அதில் முடிவெடுக்கும். ஒருவேளை விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதை எதிர்கொள்ள தேவையான வாக்கு எந்திரங்கள் தயாராக உள்ளன. நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம்.

நாடாளுமன்ற தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும் வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை. எனவே தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் 17-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும்" என்று அவர் கூறினார்.


Next Story