எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட பிரச்சார பயணத் திட்டம் வெளியீடு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சார பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சார பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1.4.2024 முதல் 15.4.2024 வரை இரண்டாம் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் குறித்த அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், நாமக்கல், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், சென்னை வடக்கு, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி, திருப்பூர், ஆரணி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, சிதம்பரம், பெரம்பலூர், மத்திய சென்னை மற்றும் சென்னை தெற்கு ஆகிய பகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அ.தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.