குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, தங்களது ஜனநாயக விரோத செயல்களுக்கு பதில் அளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் D. லோகேஷ் தமிழ்செல்வன் உள்ளிட்ட கழக தொண்டர்கள் 25.3.2024 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊட்டி காபி ஹவுஸ்-ல் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய நீலகிரி மாவட்டக் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்றிருந்தனர்.
அதன்படி, 25.3.2024 அன்று காலை சுமார் 11 மணி அளவில் ஊர்வலம் செல்வதற்கு தயாராக இருந்த நிலையில், ஊட்டி காவல் துறையினர் வேண்டுமென்றே பல்வேறு தடுப்புகளைப் போட்டு கழகத்தினர் ஊர்வலம் செல்ல அனுமதிக்காமல் தாமதப்படுத்தி உள்ளனர். பிறகு 1 மணிக்குள் கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் துறையிடம் கழக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்திய பிறகு, காவல் துறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஏற்கெனவே பெற்ற அனுமதியின்படி, ஒன்றரை மணிநேர காலதாமதத்திற்குப் பிறகு, மதியம் 12.30 மணிக்கு ஊர்வலம் செல்ல அனுமதித்துள்ளனர். இதனால் கழக வேட்பாளர், கழக நிர்வாகிகள் என்று தேர்தல் விதியின்படி 5 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மதியம் 12.55 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே செல்ல முடிந்தது.
காவல் துறையினர் தேவையின்றி கழகத்தினர் ஊர்வலம் செல்ல காலதாமதம் செய்ததை எதிர்த்து, கழக உறுப்பினர்கள் அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டி உள்ளனர். ஆனால், ஊட்டி காவல்துறையினர் அமைதியான முறையில் போராடிய கழக உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தி கும்பலை கலைத்துள்ளனர். காவல் துறையினரின் தவறான நடவடிக்கைகளை கழக வழக்கறிஞர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடமும், மாவட்டத் தேர்தல் அலுவலரான, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் 26.3.2024 அன்று புகாராக தெரிவித்துள்ளனர்.
கழக வெற்றி வேட்பாளர் மற்றும் தொண்டர்களின் ஊர்வலத்தை தேவையில்லாமல் தடுப்புகள் ஏற்படுத்தி காவல் துறை காலதாமதம் செய்ததற்கு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளரிடம் தனது வருத்தத்தை வாய்மொழியாக தெரிவித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் ஆளும் தி.மு.க-வின் தாளத்திற்கு ஏற்ப, ஊட்டி டவுன் காவல்துறையினர் 25.3.2024 அன்றே நீலகிரி மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி D. வினோத் உள்ளிட்ட பெயர் குறிப்பிடாமல் 20 கழக நிர்வாகிகள் மீது, பல நபர்களிடம் பொய் புகார்களைப் பெற்று ஜாமினில் வரமுடியாதபடி FIR பதிவு செய்துள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் கழக வேட்பாளரின் வெற்றியைத் தடுக்க குறுக்கு வழிகளில் செயல்படும் ஜனநாயக விரோத தி.மு.க, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கழக ஊர்வலம் ஆரம்பிப்பதற்கு காலதாமதம் ஏற்படுத்தியதற்காக காவல்துறை கண்காணிப்பாளர் வருத்தம் தெரிவித்துவிட்டு, மறுபுறம் மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்வது என்று, இந்த இரட்டை வேட கபட நாடகம் யாரை திருப்திபடுத்த என்று தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். உரிய அனுமதி பெற்றும், 11 மணி முதல் 12.30 மணிவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தொண்டர்களை ஊர்வலம் நடத்த அனுமதி தராமல், ஆளும் தி.மு.க-வினரை திருப்திபடுத்த, கழக நிர்வாகிகள் மீது FIR பதிவு செய்துள்ள ஊட்டி காவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தவறிழைத்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து கழக வழக்கறிஞர் பிரிவு வலியுறுத்துவதுடன், தி.மு.க-விற்கு ஆதரவாக நடந்துகொண்டு பொய் புகார் பதிவு செய்த ஊட்டி காவல்துறை மீது சட்டப்படியான நடவடிக்கைகளை கழகம் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, தங்களது ஜனநாயக விரோத செயல்களுக்கு பதில் அளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.