தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.
அ.தி.மு.க 33 தொகுதிகளிலும், தே.மு.தி.க 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
தே.மு.தி.க.வுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தே.மு.தி.க அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக வந்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து தே.மு.தி.க அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு சென்றுள்ளார். மாவட்டச்செயலாளர்களின் விருப்பபடியே அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க கூட்டணி வைத்துள்ளது. வரும் 24-ம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருச்சியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் 40 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவர். 2011-ம் ஆண்டு அமைத்த வெற்றிக்கூட்டணியை மீண்டும் அமைத்துள்ளோம். வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம்.
மாநிலங்களவை வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்போம். தே.மு.தி.க விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க வழங்கி உள்ளது. நேர்காணல் நடத்தி முறைப்படி வேட்பாளர்களை தேர்வு செய்வோம். 2011 சட்டமன்ற தேர்தலைப்போல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம்.தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன்.
தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும். மார்ச் 24-ம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தே.மு.தி.க தொடங்குகிறது. மார்ச் 25-ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.