மராட்டியத்தின் துணை முதல்-மந்திரி பதவியிலிருந்து விலகும் பட்னாவிஸ்
மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு எனது தவறு என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க.வை பின்னுக்கு தள்ளியது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளையும் , சரத் பவாரின் என்.சி.பி. 8 தொகுதிகளையும் கைப்பற்றின.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வின் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தின் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
"மராட்டியத்தில் பா.ஜ.க. தோல்விக்கு முழுப் பொறுப்பேற்கிறேன். சில இடங்களில் நான் தோல்வியடைந்தேன், மராட்டியத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு எனது தவறு. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தவும், குறைபாடுகளை சரிசெய்யவும், எனது அரசாங்க பணிகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு எனது கட்சியின் மேலிடத்தை கேட்டுக்கொள்கிறேன். நான் எனது மூத்தவர்களை சந்தித்து எனது எதிர்பார்ப்புகளை அவர்களிடம் தெரிவிப்பேன்." என்றார்.
மேலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோருடன் சில ஒருங்கிணைப்பு சிக்கல்கள் இருந்தன, நாங்கள் விரைவில் சந்தித்து விவாதிப்போம் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.