வருண் காந்திக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்..? மேனகா காந்தி பதில்
மத்திய அரசை விமர்சித்ததால் வருண் காந்திக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டதா என்பது குறித்து மேனகா காந்தி பதில் அளித்தார்.
சுல்தான்பூர்,
உத்தரபிரதேசத்தின் பிலிபிட் தொகுதி பா.ஜனதா எம்.பி.யான வருண் காந்தி, கடந்த சில மாதங்களாக மத்திய அரசை விமர்சித்து வந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சீட் வழங்கவில்லை. அதேநேரம் அவரது தாய் மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியை ஒதுக்கியது. மத்திய அரசை விமர்சித்ததால்தான் வருண் காந்திக்கு போட்டியிட சீட் வழங்கப்படவில்லை என்று கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேனகா காந்தி நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அரசை விமர்சித்ததால்தான் வருண் காந்திக்கு சீட் வழங்கப்படவில்லையா? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மேனகா காந்தி பதில் அளித்து கூறியதாவது:-
அரசை விமர்சித்ததை தவிர வேறு ஒரு காரணத்தை என்னால் நினைக்க முடியவில்லை.இந்த விவகாரத்தில் ஒரு தாயாக நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று சொல்ல முடியாது. அதேநேரம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவர் இந்த முறையும் போட்டியிட வேண்டும் என பிலிபிட் தொகுதியில் இருந்து அழைப்புகள் வந்தது உண்மைதான். அவர் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் கட்சித்தலைமை ஒரு முடிவு எடுத்திருக்கிறது, அவ்வளவுதான்.சுல்தான்பூர் தொகுதியில் எனக்காக பிரசாரம் செய்வதில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு மேனகா காந்தி கூறினார்.