வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல்
வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா களம் காண்கிறார்.
வயநாடு,
கேரளாவில் 26-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜக. உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கேரளாவில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. நாளை (ஏப்ரல் 4) மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தொண்டர்களுடன் வாகன பேரணியாக சென்ற, ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போதைய வயநாடு எம்.பி. ராகுல்காந்திக்கு எதிராக ஆனி ராஜா களம் காண்கிறார். ஆனி ராஜா இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.