'வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு 1 ரூபாய் கூட நிதி தரவில்லை' - உதயநிதி ஸ்டாலின்
வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
"தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக 80 கோடி ரூபாய், கால்நடை பராமரிப்பு கடனாக 24 கோடி ருபாய், சிறுவணிகர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனாக 36 கோடி ரூபாய், வெள்ளத்தால் சேதமடைந்த விசைப்படகுகள், நாட்டுப்படகுகள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றிற்கு நிவாரணமாக 273 கோடியே 21 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பேரிடர் காலத்தின்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு திராவிட மாடல் அரசு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணங்களை வழங்கியுள்ளது. வெள்ள நிவாரணத்திற்கான நிதியை மத்திய அரசிடம் பலமுறை கேட்டோம். ஆனால் ஒரு ரூபாய் கூட அவர்கள் நிவாரணம் தரவில்லை.
மிக்ஜாம் புயலுக்கும், நெல்லை மற்றும் தூத்துக்குடி வெள்ளத்திற்கும் மோடி அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கொடுத்தது அனைத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் தி.மு.க. அரசுதான்.
நமது நிதி உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டோம். மொழி உரிமையை அ.தி.மு.க. விட்டுக் கொடுத்துவிட்டது. இழந்த அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்க எதிர்வரும் தேர்தல்தான் ஒரே வாய்ப்பு.
பிரதமர் மோடியை இனி 29 பைசா என செல்லப்பெயர் வைத்து அழைக்கலாம். இந்த பெயருக்கான அர்த்தம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இருந்து நாம் 1 ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு நமக்கு 29 பைசாவைத்தான் திருப்பி கொடுக்கிறது. அதே சமயம் பா.ஜ.க. ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு 3 ரூபாயும், பீகார் மாநிலத்திற்கு 7 ரூபாயும் திரும்ப கிடைக்கிறது.
2010-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் நீட் தேர்வு வந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு வரவில்லை. அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு, கவுன்சிலிங் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் சீட் வழங்கி ஏழை, எளிய மாணவர்களை மருத்துவராக்கியது."
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.