அயோத்தியில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு.. வெற்றியை நெருங்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்


அயோத்தியில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு.. வெற்றியை நெருங்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்
x

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதையடுத்து, இது தேசிய அளவில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என பேசப்பட்டது.

அயோத்தி:

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, மூன்றாவது முறையாக அவர்கள் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. எனினும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்வி அடையும் நிலை உள்ளது.

ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியிலும் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போதைய எம்.பி.யும், பா.ஜ.க. வேட்பாளருமான லாலு சிங் பின்தங்கினார். மாலை 6 மணி நிலவரப்படி அவதேஷ் பிரசாத், லாலு சிங்கைவிட 54500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை நெருங்கினார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சச்சிதானந்த் பாண்டே மூன்றாவது இடத்தில் இருந்தார்.

அயோத்தி ராமர் கோவில் 1990களில் பா.ஜ.க.வின் அரசியலின் மையமாக இருந்தது. அங்கு சட்டப்போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது தேசிய அளவில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என பேசப்பட்டது. அதற்கேற்ப, அயோத்தியின் சமீபத்திய தேர்தல் பிரசாரங்களும் முக்கியத்துவம் பெற்றன.

'காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்'' என மே 17-ம் தேதி பாரபங்கி மற்றும் ஹமிர்பூரில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பிரதமர் மோடி கடுமையாக பேசினார்.

ஆனால், இதுபோன்ற பிரசாரங்கள் இந்த தேர்தலில் எடுபடவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.


Next Story