ஒடிசாவில் ஆளுங்கட்சியில் இணைந்த பா.ஜ.க. துணைத்தலைவர்


ஒடிசாவில் ஆளுங்கட்சியில் இணைந்த பா.ஜ.க. துணைத்தலைவர்
x

பாலசோர் மக்களவை தொகுதியில் பி.ஜே.டி. சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக லேகாஸ்ரீ முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புவனேஸ்வர்:

ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவர் லேகாஸ்ரீ சமந்தசிங்கர் கட்சியில் இருந்து விலகினார். லேகாஸ்ரீ தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமாலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில், "கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உழைத்தேன். நேர்மையாகவும் கடினமாகவும் உழைத்தபோதிலும், என்னால் தலைமையின் நம்பிக்கையை பெற முடியவில்லை. எனவே, இங்கிருந்து நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. இங்கிருந்தால் ஒடிசா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது விருப்பமும் தடைபடுகிறது" என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வில் இருந்து விலகிய லேகாஸ்ரீ, ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி.) கட்சியில் இன்று இணைந்தார். தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் மனாஸ் மங்கராஜ் மற்றும் சஸ்மித் பத்ரா ஆகியோர் முன்னிலையில் தன்னை பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் லேகாஸ்ரீ பேசும்போது, "எனது உழைப்பை அங்கீகரிக்காத கட்சிக்கு வியர்வை சிந்தி உழைத்துள்ளேன். என்னை ஏற்றுக்கொண்ட பிஜு ஜனதா தளம் கட்சிக்கு நன்றி. முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் வளர்ச்சிப்பணிகள் எனக்கு ஊக்கம் அளித்தன. பிஜு ஜனதா தளம் கட்சிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்றார்.

பாலசோர் மக்களவை தொகுதியில் பி.ஜே.டி. இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக லேகாஸ்ரீ முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 தேர்தலின்போது ஒடிசாவில் உள்ள 21 மக்களவை தொகுதிகளில் 7 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் சார்பில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலில் இதுவரை 6 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

லேகாஸ்ரீக்கு முன்னதாக பா.ஜ.க.வின் மற்றொரு துணைத்தலைவர் பிருகு பாக்சிபத்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story