பா.ஜனதா இனி அரசியல் கட்சி அல்ல, மோடியை வழிபடும் வழிபாட்டு முறை: ப.சிதம்பரம் கடும் தாக்கு


பா.ஜனதா இனி அரசியல் கட்சி அல்ல, மோடியை வழிபடும் வழிபாட்டு முறை: ப.சிதம்பரம் கடும் தாக்கு
x

கோப்புப்படம்

அரசியல் கட்சியாக இல்லாமல், மோடியை வணங்கும் வழிபாட்டு முறையாக பா.ஜனதா மாறி விட்டதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இது தெடார்பாக பேசிய அவர், "பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை வெறும் 14 நாட்களில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதற்கும் தலைப்பு இல்லை. வெறும் மோடியின் வாக்குறுதிகள் என்று மட்டுமே அவர்கள் அழைக்கிறார்கள். பா.ஜனதா தற்போது அரசியல் கட்சியாக இல்லை. மாறாக மோடியை வணங்கும் வழிபாட்டு முறையாக மாறி விட்டது. மோடியின் வாக்குறுதி, தலைவர்களை வழிபடும் நாடுகளைத்தான் நினைவுபடுத்துகிறது.

இந்தியாவில் அந்த வழிபாட்டு முறைகள் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். பத்தாண்டு கால மோடி ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், அவர் அரசியல் சாசனத்தை திருத்தக்கூடும். எனவே ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

நாடு தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், வேலையில்லா திண்டாட்டம் ஆகும். எனவே வேலை உருவாக்கம் மற்றும் சொத்து உருவாக்கம் குறித்து காங்கிரசின் தேர்தல் அறிக்கை பேசுகிறது. இந்தியா கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்ப பெறப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்" என்று ப.சிதம்பரம் கூறினார்.


Next Story