பெண் முஸ்லிம் வாக்காளர்கள் புர்காவை அகற்ற கோரிய பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு
வாக்காளர்களை முழு அளவில் ஆய்வு செய்த பின்னரே வாக்கு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடமும் பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா கூறியுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கே. மாதவி லதா போட்டியிடுகிறார். இதேபோன்று, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் சார்பில் அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அவர்களின் புர்காவை நீக்கி முகங்களை காட்டும்படி லதா கூறியுள்ளார். அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் முகங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர் அப்படி கூறியுள்ளார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து உள்ளது. அதில், வாக்கு மையத்திற்கு வந்த பெண் வாக்காளர்களிடம் உங்களுடைய புர்காவை நீக்கி விட்டு, முகங்களை காட்டுங்கள் என கேட்கிறார். அதனாலேயே அடையாளங்களை ஆய்வு செய்ய முடியும் என்று அவர் கூறுகிறார்.
அவர், வாக்காளர்களை முழு அளவில் ஆய்வு செய்த பின்னரே வாக்கு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடமும் கூறுகிறார். இந்த வீடியோ பரவியதும் சர்ச்சையும் எழுந்தது.
இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக, மலக்பேட்டை காவல் நிலையத்தில் 171சி, 186, 505(1)(சி) ஆகிய பிரிவுகளின் கீழ் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 132-வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை ஐதராபாத் கலெக்டர் அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.