பீகார்: மேடையில் தொண்டரை தள்ளி விட்ட தேஜ் பிரதாப்; வைரலான வீடியோ


பீகார்:  மேடையில் தொண்டரை தள்ளி விட்ட தேஜ் பிரதாப்; வைரலான வீடியோ
x

ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் மிசா பாரதி மற்றும் ராப்ரி தேவி இருவரும் சேர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பாட்னா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவர்களில் ஒருவரான மிசா பாரதி பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்த பின்னர், பீகாரின் பாட்னா நகரில் ஸ்ரீகிருஷ்ணா நினைவு அரங்கில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

இதில், அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவ், திடீரென கட்சி தொண்டர் ஒருவரை மேடையில் தள்ளி விட்டார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மிசா பாரதி மற்றும் ராப்ரி தேவி இருவரும் சேர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுபற்றி 45 வினாடிகள் ஓட கூடிய வீடியோ வெளிவந்து வைரலானது. இதனை தொடர்ந்து, தேஜ் பிரதாப் வெளியிட்ட விளக்கத்தில், என்னுடைய வீடியோவை வைரலாக்கும் நபர்களுக்கு நான் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன்.

ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் உண்டு. நீங்கள், ஒரு பக்கம் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் மற்றொரு பக்கம் பற்றி நான் கூறுகிறேன். வேட்பாளர் மிசா பாரதி மற்றும் என்னுடைய தாயார் இருவரும் ஒன்றாக இருந்தபோது, எங்களுக்கு இடையே அந்த நபர் உள்ளே வந்து, என்னை தள்ளினார்.

என் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தள்ளியதும் வலி அதிகரித்தது. என்னை காப்பாற்றி கொள்ளவே நான் அவரை தள்ளி விட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். எவரையும் புண்படுத்தும் நோக்கம் ஒருபோதும் எனக்கு கிடையாது என கூறினார்.

எனினும், தேர்தலுக்கு முன்பே மேடையில் தொண்டர்களிடம் இதுபோல் அவர்கள் நடந்து கொள்ளும் சூழலில், தேர்தலுக்கு பின்னர் மக்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்? என கற்பனை செய்து பாருங்கள் என்று பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஜாத் பூனவல்லா கூறியுள்ளார்.


Next Story