அருணாசல பிரதேசம்: முதல்-மந்திரி உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
தவாங் மாவட்டம் முக்தோ தொகுதியில் முதல்-மந்திரி பிமா காண்டு மூன்றாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
இடாநகர்:
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணக்கை 60 ஆகும். 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 41 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் அருணாசல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான மார்ச் 30-க்குப் பிறகு (நாளை மறுநாள்) அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும்.
தவாங் மாவட்டம் முக்தோ தொகுதியில் முதல்-மந்திரி பிமா காண்டு மூன்றாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
இதேபோல் சாகலீ தொகுதியில் தேச்சி ராது, டாலி தொகுதியில் ஜிக்கே டாக்கோ, தாலிஹா தொகுதியில் நியாட்டோ துகம், ரோயிங் தொகுதியில் முட்சு மித்தி ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் தேச்சி ராது மட்டும் புதுமுகம். மற்ற மூன்று பேரும் அந்தந்த தொகுதிகளின் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மட்டும்தான் 60 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜ.க.வைத் தொடர்ந்து, சுயேட்சைகள் -37, தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) - 31, காங்கிரஸ்- 25, தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.)- 17 பிராந்திய கட்சியான அருணாச்சல் மக்கள் கட்சி-14 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிராந்திய கட்சியான அருணாச்சல் ஜனநாயக கட்சியும் 5 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.