கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடி வரும் கட்சி அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி பேச்சு
தேர்தலில் தி.மு.கவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
"ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடி தொழிலையும் விவசாயத்தையும் நம்பி உள்ளது. அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மீனவ சமுதாயத்தை சேர்ந்த 3 வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் ராமநாதபுரத்திற்கு கொண்டுவந்த திட்டம் என்ன?
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாங்கள் கொண்டுவந்தோம். ஆனால் உங்களால் 3 ஆண்டுகளில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டுவர முடிந்ததா? நீங்கள் வெற்றிபெற்று என்ன செய்யப்போகிறீர்கள். விரைவில் அதிமுக ஆட்சி அமையும். மக்களின் பிரச்சனைகள் நீங்கும். திமுகவுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
1974-ல் மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திமுகவும் இருந்தபோது மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. அப்போது தமிழகத்தை ஆண்ட முதல் அமைச்சர் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலை மாற கச்சத்தீவை மீண்டும் பெற வேண்டும். அப்போதுதான் மீனவர்களின் பிரச்சினை தீரும். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடிவரும் ஒரே கட்சி அதிமுக. 2014ல் மத்தியில் பாஜக ஆட்சியின்போது கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என ஜெயலலிதா கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். 10 ஆண்டுகளாக மீனவர்களின் துன்பங்களை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. மீனவர்களின் வாக்கை பெற கச்சத்தீவை பற்றி பாஜக பேசி வருகிறது." இவ்வாறு அவர் பேசினார்.