எதிர்க்கட்சிக்கு பதிலாக சொந்த கட்சி தலைவரை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்; பிரசாரத்தில் பரபரப்பு


எதிர்க்கட்சிக்கு பதிலாக சொந்த கட்சி தலைவரை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்; பிரசாரத்தில் பரபரப்பு
x

ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவர் மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவை குறிப்பிட்டு, நடிகை கங்கனா ரணாவத் பேச முயன்றார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இமாசல பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரணாவத் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவரை விமர்சிப்பதற்கு பதிலாக, சொந்த கட்சி தலைவரையே விமர்சித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக தேஜஸ்வி சூர்யா அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், கங்கனா, ஓட்டு கேட்டு தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவர் மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவை குறிப்பிட்டு பேச முயன்றார்.

சமீபத்தில் வீடியோ ஒன்றில், தேஜஸ்வி மீன் சாப்பிடும் காட்சிகள் வைரலாகின. இதுபற்றி பா.ஜ.க.வுக்கும், ராஷ்டீரிய ஜனதாதள கட்சிக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதனை குறிப்பிட்டு பேச விரும்பிய கங்கனா, பிரசாரத்தில் பேசும்போது, குணங்கெட்ட இளவரசரை கொண்ட கட்சியொன்று உள்ளது.

நிலவில் உருளை கிழங்குகள் வளர வேண்டும் என விரும்பும் ராகுல் காந்தியாகட்டும் அல்லது போக்கிரித்தனத்தில் ஈடுபட்டு மீனை சாப்பிடும் தேஜஸ்வி சூர்யா ஆகட்டும் என பேசினார். தேஜஸ்வி யாதவ் என கூறுவதற்கு பதிலாக, சொந்த கட்சியான பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யாவின் பெயரை குறிப்பிட்டு கங்கனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலான நிலையில், அதனை பகிர்ந்த தேஜஸ்வி யாதவ் யாரிந்த பெண்? என தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் கேட்டுள்ளார்.


Next Story