ஆந்திராவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் 81.86 சதவிகித வாக்குகள் பதிவு
ஆந்திராவில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மொத்தம் 81.86 சதவிகித வாக்குகள் பதிவுவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ந்தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆந்திராவில் பதிவான வாக்கு சதவிகிதத்தின் விவரத்தை அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா இன்று வெளியிட்டார்.
இதன்படி ஆந்திராவில் 25 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 81.86 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் 80.66 சதவிகித வாக்குகள் வாக்கு இயந்திரங்கள் மூலமாகவும், 1.2 சதவிகித வாக்குகள் தபால் மூலமாகவும் பதிவாகியுள்ளன.
ஆந்திராவில் மொத்தம் 4.13 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 560 பேரும், 175 சட்டமன்ற தொகுதிகளில் 3 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 333 பேரும் வாக்களித்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை நடந்த 4 கட்ட வாக்குப்பதிவுகளில், ஆந்திர பிரதேச மாநிலம் அதிகபட்ச வாக்கு சதவிகிதத்தை பதிவு செய்துள்ளதாக முகேஷ் குமார் மீனா குறிப்பிட்டார். அதே போல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் வரலாற்றிலேயே இந்த முறை அதிக வாக்குப்பதிவு எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.